புதுடில்லி: கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதியாக உள்ளார். இவர், கோவையின் முன்னாள் எம்.பி.,யாகவும் இருந்தவர். துணை ஜனாதிபதியாக இருந்தாலும், கோவையின் முன்னாள் எம்.பி., என, கூறிக்கொள்வதில் பெருமை கொள்கிறார் ராதாகிருஷ்ணன் என்பது, சமீபத்தில் ராஜ்யசபாவில் நடந்த ஒரு விவாதத்தில் தெரிய வந்தது.
சுங்கச்சாவடி குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார் பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சருமான நிதின் கட்கரி. எம்.பி.,க்களுக்கு நாடு முழுதும் சுங்கச்சாவடி கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த சலுகையை முன்னாள் எம்.பி.,க்களுக்கும் தர வேண்டும் என, ஒரு எம்.பி., கோரிக்கை வைத்தார்.
‘முன்னாள் எம்.பி.,க்களுக்கு இந்த சலுகையை வழங்கினால், அரசுக்கு ஏகப்பட்ட நஷ்டம் உண்டாகும்’ என, பதில் அளித்தார் கட்கரி. உடனே சபை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ‘நானும் ஒரு முன்னாள் எம்.பி., தான். எங்களுக்கும் இந்த சலுகை வழங்க வேண்டும்’ என, கேட்டார். உடனே கட்கரி, ‘சபைத் தலைவரான நீங்கள் தற்போது துணை ஜனாதிபதி. உங்களுக்கு எப்போதுமே இந்த சலுகை உண்டே’ என, பதில் அளித்தார்.
‘சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாகிவிட்டாலும், முன்னாள் எம்.பி., என, கோவை மீதான மோகம் அவருக்கு குறையவில்லை’ என தமிழக எம்.பி.,க்கள் பேசினர்.