Take a fresh look at your lifestyle.

தமிழக அமைச்சராகிறார் பிரவீன் சக்ரவர்த்தி?

5

புதுடில்லி: தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே, த.வெ.க.,வுடன் காங்., கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டவர் பிரவீன் சக்ரவர்த்தி. த.வெ.க., வெற்றிக்கு பின், விஜய்க்கு ஆதரவு தர ராகுலை நிர்ப்பந்தித்தவர் இவர். முதல்வர் விஜயுடன் நெருக்கமாகி விட்டாலும், ராகுலின் புதிய ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார்.

இதனால், இவருக்கு தமிழகத்திலிருந்து ராஜ்யசபா பதவி கிடைத்தது. தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபட விரும்புகிறாராம் பிரவீன் சக்ரவர்த்தி. எம்.பி.,யாக இருப்பதை விட, தமிழக எம்.எல்.ஏ.,வாக இருந்தால், அமைச்சராகி விடலாம் என்பது இவரது ஆசை. இதை ராகுலும் ஆதரிக்கிறாராம்.

பிரவீன் சக்ரவர்த்தி பிலானியில் உள்ள பல்கலையில் பொறியியல் பட்டமும், அமெரிக்காவின் புகழ்பெற்ற வார்டன் பள்ளியில், எம்.பி.ஏ., பட்டமும் பெற்றவர். உலக புகழ் பெற்ற, ‘ஐ.பி.எம்., மைக்ரோசாப்ட்’ நிறுவனங்களிலும் பணியாற்றி உள்ளார். இவர் ஒரு சிறந்த பொருளாதார நிபுணரும் கூட.

இவர், தன் அமைச்சரவையில் இருந்தால் நல்லது என, தமிழக முதல்வர் விஜயும் விரும்புவதாக சொல்லப்படுகிறது. காங்., தரப்பிலிருந்து இருவர் இப்போது அமைச்சர்களாக உள்ளனர். இதில் ஒருவருக்கு பதிலாக, பிரவீன் சக்ரவர்த்தி அமைச்சராக வாய்ப்பு உள்ளதாம். எம்.பி., பதவியை ராஜினாமா செய்து, தற்போது காலியாக உள்ள ஒரு சட்டசபை தொகுதியில் போட்டியிடவும் தயாராக உள்ளாராம் பிரவீன்.