புதுடில்லி: ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டில்லியில் போராட்டம் நடத்தினர். இதனால், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். இந்த போராட்டத்திற்கு ராகுல், பிரியங்கா என காங்., தலைவர்கள் ஆதரவு அளித்ததுடன், பிரதமர் வீட்டு முன் தர்ணாவிலும் ஈடுபட்டனர்.
இது இப்படியிருக்க, காங்., கூட்டணி ஆட்சி செய்யும் ஜார்க்கண்டிலும் இதே போல வினாத்தாள் கசிவு போராட்டம் நடக்கிறது. அதை கண்டுகொள்ளவில்லை ராகுல். இங்கு அரசு தேர்வுகளில் நடந்த முறையற்ற ஆட்சேர்ப்பு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், தலைநகர் ராஞ்சியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர் தலைவர் தேவேந்திர நாத் மெஹதோ காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வினாத்தாள் கசிவு, ஓ.எம்.ஆர்., தாள் கையாளுதல் மற்றும் தகுதியான மதிப்பெண் பெற்றவர்கள் புறக்கணிக்கப்பட்டது என, பல முறைகேடுகள் நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அத்துடன், இந்த தேர்வை நடத்துவதற்கு கொடுக்கப்பட்ட ஒப்பந்தம், ஏற்கனவே முறைகேடு புகார்களில் சிக்கிய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, இந்த தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே இவர்களது கோரிக்கை. இந்த போராட்டத்திற்கு பா.ஜ., உட்பட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.