Take a fresh look at your lifestyle.

டான்போஸ்கோ, மேக்டலிட் பள்ளிகள் சாம்பியன்

4

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் பள்ளி அணிகள் இடையிலான எட்டாவது மாவட்ட கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் மூன்று நாட்கள் நடந்தது. இதில் நேற்று முந்தினம் நடந்த ஆண்கள் இறுதி ஆட்டத்தில் பெரம்பூரை சேர்ந்த டான் பாஸ்கோ அணி 25-15, 25-20 என்ற நேர் செட்டில் மயிலாப்பூரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. மூன்றாவது இடத்துக்கான போட்டியில் முகப்பேரில் உள்ள வேலம்மாள் அணி 25-8, 25-16 என்ற நேர் செட்டில் ராயபுரத்தில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் அணியை வென்றது. பெண்கள் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் புரசைவாக்கத்தில் உள்ள டி. இ. எல். சி. மேக்டலின் மேல்நிலைப்பள்ளி 25-13, 24-26, 25-18 என்ற செட் கணக்கில் மயிலாப்பூரில் உள்ள லேடி சிவசாமியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

3வது இடத்துக்கான ஆட்டத்தில் பெரம்பூரில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 25-14, 25-13 என்ற நேர் செட் கணக்கில் கீழ்பாக்கத்தில் உள்ள கோல சரஸ்வதி பள்ளியை தோற்கடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு வருமான வரி கமிஷனர் பாண்டியன், சுங்க இலகா உதவி கமிஷனர் சண்முகசுந்தரம் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். தமிழ்நாடு கைப்பந்து சங்க பொருளாளர் செல்வ கணபதி, சென்னை மாவட்ட கைப்பந்து சங்க நிர்வாகிகள் ராஜன், பழனியப்பன், ஸ்ரீ கேசவன், சர்வதேச கைப்பந்து வீரர்கள் நவீன் ராஜா, ஜேக்கப் அஸ்வின் ராஜ் உட்பட பலர் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.