விஜய் சேதுபதியின் திறந்த அழைப்புடன் தொடங்கிய பிக் பாஸ் Common Man முயற்சிக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து அமோக வரவேற்பு கிடைத்தது. மாணவர்கள், இல்லத்தரசிகள், தொழில்முனைவோர், பணியாளர்கள் மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் கனவை நனவாக்க ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
பிக் பாஸ் Common Man மூலம், முதல் முறையாக சாதாரண மக்களுக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை பிரபலங்களை மட்டுமே மையப்படுத்திய இந்த நிகழ்ச்சி, இப்போது அசாதாரண வாழ்க்கைக் கதைகளைக் கொண்ட சாதாரண மனிதர்களின் பயணத்தை முன்னிறுத்தும் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறது.
ஒரு மாதத்திற்கு முன்பு விஜய் சேதுபதி விடுத்த அழைப்பைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோர் தங்களது ஆளுமை மற்றும் வாழ்க்கைப் பயணத்தை வெளிப்படுத்தும் ஆடிஷன் வீடியோக்களை அனுப்பினர். அதனைத் தொடர்ந்து பல கட்டத் தேர்வுகள் மற்றும் நேர்முகப் பரிசோதனைகளின் மூலம் போட்டியாளர்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளனர்.
தற்போது, பிக் பாஸ் வீட்டிற்குள் இடம்பிடிக்கும் இறுதி சிலரைக் கண்டறியும் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த பரபரப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், இறுதி இல்லத்தரர்களைத் தேர்வு செய்யும் முக்கிய ஆளுமைகளை அறிமுகப்படுத்தும் புதிய புரொமோவை ஸ்டார் விஜய் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளன. இந்த சிறப்பு தேர்வுப் பயணத்தில் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களான ஆரி அர்ஜுனன், ராஜு ஜெயமோகன் மற்றும் ஓவியா நடுவர்களாக இணைந்துள்ளனர். ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற மாயா கிருஷ்ணன், இந்த ஆடிஷன் பயணத்தின் தொகுப்பாளராக இணைந்து, சாதாரண மக்களின் அசாதாரண பயணங்களை முன்னிறுத்தும் இந்த புதிய அத்தியாயத்திற்கு வழிகாட்டுகிறார்.