சென்னை வரும் அமித்ஷா.. நேரில் சந்திக்க முயற்சிக்கும் எஸ்பி வேலுமணி? அதிமுகவில் அடுத்த சம்பவம்!

ஆகஸ்ட் 9ஆம் தேதி சென்னை வரும் தமிழகம் வரும் அமித்ஷாவை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தரப்பு நேரில் சந்திக்க முயற்சிகள் எடுப்பதாக சில பேச்சுகள் அடிபட தொடங்கி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் போக்கை தொடர்ந்து வரும் எஸ்பி வேலுமணி தரப்பு, அமித்ஷாவை சந்திக்க முயற்சிகள் மேற்கொள்ளும் தகவல் பேசுபொருளாகி இருக்கிறது.

சட்டசபைத் தேர்தலுக்கு பின் அதிமுகவில் மீண்டும் மோதல் வெடித்தது. எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தரப்பு ஒரு அணியாகவும், எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒரு அணியாகவும் இருந்தது. இதன்பின் எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் மன்னிப்பு கடிதம் கொடுத்து எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த போதும், அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பதவி மீண்டும் கொடுக்கப்படவில்லை.

அதற்கு பதிலாக அதிகாரம் இல்லாதபுதிய பொறுப்புகளை எடப்பாடி பழனிசாமி கொடுத்தார். ஆனால் எஸ்பி வேலுமணி, காமராஜ் உள்ளிட்ட பலரும் அந்த பொறுப்புகளை ஏற்க மாட்டோம் என்று அறிவித்துவிட்டனர். தற்போது சட்டசபைக் கூட்டத்தொடரிலும் கூட எஸ்பி வேலுமணி தரப்பு தனி அணியாகவே செயல்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக எதிர்ப்பை காட்டி கொண்டே தான் இருக்கின்றனர். இதனால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையலாமா என்று எஸ்பி வேலுமணி தரப்பு டெல்லி மேலிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் டெல்லி பாஜக தலைமை இதனை கண்டுகொள்ளவில்லை. இதனால் வேறு வழியின்றி எஸ்பி வேலுமணி அணியினர் அதிருப்தி எம்எல்ஏ-வாகவே தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய நாட்களில் அமித்ஷா புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு பயணம் வருகிறார். ஆகஸ்ட் 8ல் புதுச்சேரி வரும் அமித்ஷா, அடுத்த நாள் காலை பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு திருவண்ணாமலை வருகிறார். அதன்பின் சென்னை வரும் அமித்ஷா, தமிழக பாஜகவினருடன் ஆலோசனையில் ஈடுபட்டுவிட்டு அன்று இரவே டெல்லிக்கு திரும்புகிறார்.

அமித்ஷாவின் இந்த பயணத்தின் போது அவரை சந்திக்க எஸ்பி வேலுமணி தரப்பு முயற்சிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒருவேளை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், தங்களின் கருத்துக்களை அமித்ஷாவிடம் கொண்டு செல்லவும் பாஜக சீனியர்களிடம் பேசி வருவதாக தெரிய வந்துள்ளது. இதனால் அமித்ஷாவின் முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே எஸ்பி வேலுமணியை வைத்து அண்ணாமலையின் இடத்தை நிரப்ப பாஜக தீவிரம் காட்டுவதாக சொல்லப்பட்டது. அவரும் ஆர்.எஸ்.எஸ். தலைமையுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். இதனால் எஸ்பி வேலுமணியை பாஜக பக்கம் கொண்டு வரவும் அமித்ஷா முயற்சிகள் மேற்கொள்ளக் கூடும் என்று சொல்லப்படுகிறது.

Comments (0)
Add Comment