சிட்கோ நில அபகரிப்பு வழக்கு: மா.சு மற்றும் அவரது மனைவிக்கு எதிராக சிறப்பு நீதிமன்றம் நடவடிக்கை

அரசுக்குச் சொந்தமான சிட்கோ நிலத்தைப் போலியான ஆவணங்கள் மூலம் அபகரித்த வழக்கில், முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து சாட்சி விசாரணையை ஆகஸ்ட் 31-க்குச் சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியை சேர்ந்த எஸ்.கே. கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சிட்கோ நிலத்தை, அன்றைய சென்னை மேயராக இருந்த மா. சுப்பிரமணியன் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, போலியான ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில், சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் மா. சுப்பிரமணியன் மீது மோசடி, கூட்டுச்சதி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு, மக்கள் பிரதிநிதிகள் (சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்) மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கின் குற்றச்சாட்டுப் பதிவை எதிர்த்து மா. சுப்பிரமணியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த மனு கடந்த மே மாதம் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், குற்றச்சாட்டு பதிவு செய்யப்படாமல் வழக்கு தள்ளிவைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி. சஞ்சய் பாபா முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசித்துக் காட்டியபோது, இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதாகத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்த நீதிபதி, வழக்கின் சாட்சி விசாரணையை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினமே விசாரணை நடைபெறும் என்றும் உத்தரவிட்டார்.

Comments (0)
Add Comment